Corpus pasurams 1568–1577

This page preserves the source-defined decade 7, chapter 3 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 621 · corpus 1568

Pasuram 621

Study resources at Uveda
சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச் *
செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம்
மனமுள் கொண்டு * என்றும் எப்போதும் நின்று ஏத்தும்
மா முனியை * மரம் ஏழ் எய்த மைந்தனை **
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை *
நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியை *
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் * என்
கண் இணைகள் களிப்பக் களித்தேனே 1

Pasuram 622 · corpus 1569

Pasuram 622

Study resources at Uveda
தாய் நினைந்த கன்றே ஒக்க * என்னையும்
தன்னையே நினைக்கச் செய்து * தான் எனக்கு
ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை *
அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை ** மகரக் குழைக் காதனை *
மைந்தனை மதிள் கோவல் இடைகழி
ஆயனை * அமரர்க்கு அரி ஏற்றை * என்
அன்பனை அன்றி ஆதரியேனே 2

Pasuram 623 · corpus 1570

Pasuram 623

Study resources at Uveda
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் *
மற்று ஓர் நெஞ்சு அறியான் * அடியேனுடைச்
சிந்தை ஆய் வந்து * தென்புலர்க்கு என்னைச்
சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன் **
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்
கோவினை * குடம் ஆடிய கூத்தனை *
எந்தையை எந்தை தந்தை தம்மானை *
எம்பிரானை எத்தால் மறக்கேனே? 3

Pasuram 624 · corpus 1571

Pasuram 624

Study resources at Uveda
உரங்களால் இயன்ற மன்னர் மாளப் *
பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று *
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்
எம்பிரானை * வம்பு ஆர் புனல் காவிரி **
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி *
ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று *
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு
அன்றி * என் மனம் தாழ்ந்து நில்லாதே 4

Pasuram 625 · corpus 1572

Pasuram 625

Study resources at Uveda
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது *
அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு * தாமரை அன்ன பொன் ஆர் அடி
எம்பிரானை * உம்பர்க்கு அணி ஆய் நின்ற **
வேங்கடத்து அரியை பரி கீறியை *
வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீங் கரும்பினை * தேனை நன் பாலினை
அன்றி * என் மனம் சிந்தை செய்யாதே 5

Pasuram 626 · corpus 1573

Pasuram 626

Study resources at Uveda
எள் தனைப்பொழுது ஆகிலும் * என்றும்
என் மனத்து அகலாது இருக்கும் புகழ் *
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின் *
தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்
கட்டியை ** கரும்பு ஈன்ற இன் சாற்றை *
காதலால் மறை நான்கும் முன் ஓதிய
பட்டனை * பரவைத் துயில் ஏற்றை * என்
பண்பனை அன்றிப் பாடல் செய்யேனே 6

Pasuram 627 · corpus 1574

Pasuram 627

Study resources at Uveda
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற *
பாலை ஆகி இங்கே புகுந்து * என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் *
கொண்ட பின் மறையோர் மனம் தன் உள் **
விண் உளார் பெருமானை எம்மானை *
வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் * மா மணி வண்ணன் எம் அண்ணல் *
வண்ணமே அன்றி வாய் உரையாதே 7

Pasuram 628 · corpus 1575

Pasuram 628

Study resources at Uveda
இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் * எமக்கு
இம்மையே அருள்பெற்றமையால் * அடும்
துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர் *
தோற்றத் தொல் நெறியை ** வையம் தொழப்படும்
முனியை வானவரால் வணங்கப்படும்
முத்தினை * பத்தர் தாம் நுகர்கின்றது ஓர்
கனியை * காதல் செய்து என் உள்ளம் கொண்ட
கள்வனை * இன்று கண்டுகொண்டேனே 8

Pasuram 629 · corpus 1576

Pasuram 629

Study resources at Uveda
என் செய்கேன் அடியேன் உரையீர் * இதற்கு
என்றும் என் மனத்தே இருக்கும் புகழ் *
தஞ்சை ஆளியைப் பொன்பெயரோன் * நெஞ்சம்
அன்று இடந்தவனை தழலே புரை **
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட *
சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் *
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை
அன்றி * என் மனம் போற்றி என்னாதே 9

Pasuram 630 · corpus 1577

Pasuram 630

Study resources at Uveda
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர் *
தோன்றல் வாள் கலியன் * திரு ஆலி
நாடன் * நல் நறையூர் நின்ற நம்பி தன் **
நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில் *
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் *
தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல் மாலை *
பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர்
பாட * நும்மிடைப் பாவம் நில்லாவே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.