Corpus pasurams 1588–1597

This page preserves the source-defined decade 7, chapter 5 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 641 · corpus 1588

Pasuram 641

Study resources at Uveda
தந்தை காலில் பெரு விலங்கு * தாள் அவிழ * நள் இருட்கண்
வந்த எந்தை பெருமானார் * மருவி நின்ற ஊர்போலும் *
முந்தி வானம் மழை பொழியும் * மூவா உருவின் மறையாளர் *
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் * அணி ஆர் வீதி அழுந்தூரே 1

Pasuram 642 · corpus 1589

Pasuram 642

Study resources at Uveda
பாரித்து எழுந்த * படை மன்னர் தம்மை மாள * பாரதத்துத்
தேரில் பாகன் ஆய் ஊர்ந்த * தேவ தேவன் ஊர்போலும் **
நீரில் பணைத்த நெடு வாளைக்கு * அஞ்சிப் போன குருகு இனங்கள் *
ஆரல் கவுளோடு அருகு அணையும் * அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே 2

Pasuram 643 · corpus 1590

Pasuram 643

Study resources at Uveda
செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் * சிரங்கள் ஐ இரண்டும் *
உம்பர் வாளிக்கு இலக்கு ஆக * உதிர்த்த உரவோன் ஊர்போலும் **
கொம்பில் ஆர்ந்த மாதவிமேல் * கோதி மேய்ந்த வண்டு இனங்கள் *
அம்பு அராவும் கண் மடவார் * ஐம்பால் அணையும் அழுந்தூரே 3

Pasuram 644 · corpus 1591

Pasuram 644

Study resources at Uveda
வெள்ளத்துள் ஓர் ஆல் இலைமேல் மேவி * அடியேன் மனம் புகுந்து * என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் * நின்றார் நின்ற ஊர்போலும் **
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப் * போன காதல் பெடையோடும் *
அள்ளல் செறுவில் கயல் நாடும் * அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே 4

Pasuram 645 · corpus 1592

Pasuram 645

Study resources at Uveda
பகலும் இரவும் தானே ஆய்ப் * பாரும் விண்ணும் தானே ஆய் *
நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி * நின்றார் நின்ற ஊர்போலும் **
துகிலின் கொடியும் தேர்த் துகளும் * துன்னி மாதர் கூந்தல்வாய் *
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் * அணி ஆர் வீதி அழுந்தூரே 5

Pasuram 646 · corpus 1593

Pasuram 646

Study resources at Uveda
ஏடு இலங்கு தாமரைபோல் * செவ்வாய் முறுவல் செய்தருளி *
மாடு வந்து என் மனம் புகுந்து * நின்றார் நின்ற ஊர்போலும் **
நீடு மாடத் தனிச் சூலம் * போழக் கொண்டல் துளி தூவ *
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா * அணி ஆர் வீதி அழுந்தூரே 6

Pasuram 647 · corpus 1594

Pasuram 647

Study resources at Uveda
மாலைப் புகுந்து மலர் அணைமேல் * வைகி அடியேன் மனம் புகுந்து * என்
நீலக் கண்கள் பனி மல்க * நின்றார் நின்ற ஊர்போலும் **
வேலைக் கடல்போல் நெடு வீதி * விண் தோய் சுதை வெண் மணி மாடத்து *
ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும் * வீதி அழுந்தூரே 7

Pasuram 648 · corpus 1595

Pasuram 648

Study resources at Uveda
வஞ்சி மருங்குல் இடை நோவ * மணந்து நின்ற கனவகத்து * என்
நெஞ்சு நிறையக் கைகூப்பி * நின்றார் நின்ற ஊர்போலும் **
பஞ்சி அன்ன மெல் அடி * நல் பாவைமார்கள் * ஆடகத்தின்
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா * அணி ஆர் வீதி அழுந்தூரே 8

Pasuram 649 · corpus 1596

Pasuram 649

Study resources at Uveda
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு * இங்கே நெருநல் எழுந்தருளி *
பொன் அம் கலைகள் மெலிவு எய்தப் * போன புனிதர் ஊர்போலும் **
மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல் * வரி வண்டு இசை பாட *
அன்னம் பெடையோடு உடன் ஆடும் * அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே 9

Pasuram 650 · corpus 1597

Pasuram 650

Study resources at Uveda
நெல்லில் குவளை கண் காட்ட * நீரில் குமுதம் வாய் காட்ட *
அல்லிக் கமலம் முகம் காட்டும் * கழனி அழுந்தூர் நின்றானை **
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் * மங்கை வேந்தன் பரகாலன் *
சொல்லில் பொலிந்த தமிழ் மாலை * சொல்லப் பாவம் நில்லாவே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.