Pasuram 443 · corpus 3233
Pasuram 443
கை ஆர் சக்கரத்து * என் கருமாணிக்கமே என்று என்று *
பொய்யே கைம்மை சொல்லிப் * புறமே புறமே ஆடி **
மெய்யே பெற்றொழிந்தேன் * விதி வாய்க்கின்று காப்பார் ஆர்? *
ஐயோ கண்ண பிரான் * அறையோ இனிப் போனாலே (1)
Nammazhvar · Pasurams 443–453
Corpus pasurams 3233–3243
This page preserves the source-defined decade 5, chapter 1 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 443 · corpus 3233
கை ஆர் சக்கரத்து * என் கருமாணிக்கமே என்று என்று *
பொய்யே கைம்மை சொல்லிப் * புறமே புறமே ஆடி **
மெய்யே பெற்றொழிந்தேன் * விதி வாய்க்கின்று காப்பார் ஆர்? *
ஐயோ கண்ண பிரான் * அறையோ இனிப் போனாலே (1)
Pasuram 444 · corpus 3234
போனாய் மா மருதின் நடுவே * என் பொல்லா மணியே *
தேனே ! இன் அமுதே ! * என்று என்றே சில கூத்துச் சொல்ல **
தானேல் எம் பெருமான் * அவன் என் ஆகி ஒழிந்தான் *
வானே மா நிலமே * மற்றும் முற்றும் என் உள்ளனவே (2)
Pasuram 445 · corpus 3235
உள்ளன மற்று உளவாப் * புறமே சில மாயம் சொல்லி *
வள்ளல் மணிவண்ணனே * என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும் **
கள்ள மனம் தவிர்ந்தே * உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன் *
வெள்ளத்து அணைக்கிடந்தாய் * இனி உன்னை விட்டு என் கொள்வனே? (3)
Pasuram 446 · corpus 3236
என் கொள்வன் உன்னை விட்டு? என்னும் * வாசகங்கள் சொல்லியும் *
வன் கள்வனேன் மனத்தை * வலித்துக் கண்ண நீர் கரந்து **
நின்கண் நெருங்கவைத்தே * எனது ஆவியை நீக்ககில்லேன் *
என்கண் மலினம் அறுத்து * என்னைக் கூவி அருளாய் கண்ணனே (4)
Pasuram 447 · corpus 3237
கண்ண பிரானை * விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை *
நண்ணியும் நண்ணகில்லேன் * நடுவே ஓர் உடம்பில் இட்டு **
திண்ணம் அழுந்தக் கட்டிப் * பல செய்வினை வன் கயிற்றால் *
புண்ணை மறைய வரிந்து * என்னைப் போர வைத்தாய் புறமே (5)
Pasuram 448 · corpus 3238
புறம் அறக் கட்டிக்கொண்டு * இரு வல்வினையார் குமைக்கும் *
முறை முறை யாக்கை புகல் ஒழியக் * கண்டு கொண்டொழிந்தேன் **
நிறம் உடை நால் தடம் தோள் * செய்ய வாய் செய்ய தாமரைக்கண் *
அறம் முயல் ஆழி அங்கைக் * கருமேனி அம்மான் தன்னையே (6)
Pasuram 449 · corpus 3239
அம்மான் ஆழிப்பிரான் * அவன் எவ் இடத்தான்? யான் ஆர்? *
எம் மா பாவியர்க்கும் * விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் **
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று * கைதலை பூசல் இட்டே *
மெய்ம் மால் ஆயொழிந்தேன் * எம்பிரானும் என் மேலானே (7)
Pasuram 450 · corpus 3240
மேலாத் தேவர்களும் * நிலத் தேவரும் மேவித் தொழும் *
மாலார் வந்து இனநாள் * அடியேன் மனத்தே மன்னினார் **
சேல் ஏய் கண்ணியரும் * பெரும் செல்வமும் நன்மக்களும் *
மேலாத் தாய் தந்தையும் * அவரே இனி ஆவாரே (8)
Pasuram 451 · corpus 3241
ஆவார் ஆர் துணை? என்று * அலை நீர்க் கடலுள் அழுந்தும் *
நாவாய் போல் * பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க **
தேவு ஆர் கோலத்தொடும் * திருச் சக்கரம் சங்கினொடும் *
ஆஆ என்று அருள்செய்து * அடியேனொடும் ஆனானே (9)
Pasuram 452 · corpus 3242
ஆனான் ஆளுடையான் என்று * அஃதே கொண்டு உகந்து வந்து *
தானே இன் அருள் செய்து * என்னை முற்றவும் தான் ஆனான் **
மீன் ஆய் ஆமையும் ஆய் * நரசிங்கமும் ஆய்க் குறள் ஆய் *
கான் ஆர் ஏனமும் ஆய்க் * கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே (10)
Pasuram 453 · corpus 3243
கார் வண்ணன் கண்ண பிரான் * கமலத்தடங்கண்ணன் தன்னை *
ஏர் வள ஒண் கழனிக் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் * இவை ஆயிரத்துள் இப் பத்தும் *
ஆர்வண்ணத்தால் உரைப்பார் * அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.