Corpus pasurams 998–1007

This page preserves the source-defined decade 1, chapter 6 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 51 · corpus 998

Pasuram 51

Study resources at Uveda
வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள் * மாதரார் வன முலைப் பயனே
 பேணினேன் * அதனைப் பிழை எனக் கருதிப் * பேதையேன் பிறவி நோய் அறுப்பான் **
 ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி * இளையவர் கலவியின் திறத்தை
 நாணினேன் * வந்து உன் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 1

Pasuram 52 · corpus 999

Pasuram 52

Study resources at Uveda
சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார் * திறத்தனாய் அறத்தையே மறந்து *
 புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் * போக்கினேன் பொழுதினை வாளா **
 அலம் புரி தடக்கை ஆயனே மாயா * வானவர்க்கு அரசனே *
 வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 2

Pasuram 53 · corpus 1000

Pasuram 53

Study resources at Uveda
சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து * சுரி குழல் மடந்தையர் திறத்து *
 காதலே மிகுத்து கண்டவா திரிந்த தொண்டனேன் * நமன் தமர் செய்யும் **
 வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் * வேலை வெண் திரை அலமரக் கடைந்த
 நாதனே * வந்து உன் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 3

Pasuram 54 · corpus 1001

Pasuram 54

Study resources at Uveda
வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து * பிறர் பொருள் தாரம் என்று இவற்றை *
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி * எற்றி வைத்து ** எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் * பாவீ தழுவு என மொழிவதற்கு அஞ்சி *
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 4

Pasuram 55 · corpus 1002

Pasuram 55

Study resources at Uveda
இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று * இரந்தவர்க்கு இல்லையே என்று *
 நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ * நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை **
 கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால் * படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி *
 நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 5

Pasuram 56 · corpus 1003

Pasuram 56

Study resources at Uveda
கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து * திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு *
 ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் * உணர்விலேன் ஆதலால் **
 நமனார் பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன் * பரமனே பாற்கடல் கிடந்தாய் *
 நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 6

Pasuram 57 · corpus 1004

Pasuram 57

Study resources at Uveda
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் * நீதி அல்லாதன செய்தும் *
 துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே * துளங்கினேன் விளங்கனி முனிந்தாய் **
 வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா * வானவா தானவர்க்கு என்றும்
 நஞ்சனே * வந்து உன் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 7

Pasuram 58 · corpus 1005

Pasuram 58

Study resources at Uveda
ஏவினார் கலியார் நலிக என்று * என்மேல் எங்ஙனே வாழும் ஆறு? * ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் * குறுங்குடி நெடுங் கடல் வண்ணா **
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு * உன் பாதமே பரவி நான் பணிந்து * என்
நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 8

Pasuram 59 · corpus 1006

Pasuram 59

Study resources at Uveda
ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி * உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல் *
 தான் உடைக் குரம்பை பிரியும்போது * உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன் **
 தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே * திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய் *
 நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 9

Pasuram 60 · corpus 1007

Pasuram 60

Study resources at Uveda
ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி * எழுமினோ தொழுதும் என்று *
 இமையோர் நாதன் வந்து இறைஞ்சும் * நைமிசாரணியத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து **
 காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய் * மாலை தான் கற்று வல்லார்கள் *
 ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் * உம்பரும் ஆகுவர் தாமே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.