This page preserves the source-defined decade 11, chapter 4 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
நிலை இடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் *
வள நாடு மூட இமையோர் *
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன *
அரண் ஆவன் என்னும் அருளால் **
அலை கடல் நீர் குழம்ப அகடு ஆட ஓடி *
அகல் வான் உரிஞ்ச * முதுகில்
மலைகளை மீதுகொண்டு வரும் மீனை மாலை *
மறவாது இறைஞ்சு என் மனனே
செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றித் *
திசை மண்ணும் விண்ணும் உடனே *
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப *
இமையோர்கள் நின்று கடைய **
பரு வரை ஒன்று நின்று முதுகில் பரந்து *
சுழலக் கிடந்து துயிலும் *
அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன *
திருமால் நமக்கு ஓர் அரணே
தீது அறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் *
உம்பர் உலகு ஏழினோடும் உடனே *
மாதிரம் மண் சுமந்த வட குன்றும் நின்ற *
மலை ஆறும் ஏழு கடலும் **
பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின் *
ஒருபால் ஒடுங்க வளர் சேர் *
ஆதி முன் ஏனம் ஆகி அரண் ஆய மூர்த்தி *
அது நம்மை ஆளும் அரசே 3
தளை அவிழ் கோதை மாலை இருபால் தயங்க *
எரி கான்று இரண்டு தறு கண் *
அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று *
பரியோன் சினங்கள் அவிழ **
வளை உகிர் ஆளி மொய்ம்பின் மறவோனது ஆகம் *
மதியாது சென்று ஓர் உகிரால் *
பிளவு எழ விட்ட குட்டம் அது வையம் மூடு *
பெரு நீரில் மும்மை பெரிதே
வெந் திறல் வாணன் வேள்வியிடம் எய்தி * அங்கு
ஓர் குறள் ஆகி மெய்ம்மை உணர *
செந் தொழில் வேத நாவின் முனி ஆகி வையம் *
அடி மூன்று இரந்து பெறினும் **
மந்தரமீது போகி மதி நின்று இறைஞ்ச *
மலரோன் வணங்க வளர் சேர் *
அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம் *
அது நம்மை ஆளும் அரசே
இரு நில மன்னர் தம்மை இரு நாலும் எட்டும் *
ஒரு நாலும் ஒன்றும் உடனே *
செரு நுதலூடு போகி அவர் ஆவி மங்க *
மழுவாளில் வென்ற திறலோன் **
பெரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் *
புலமங்கை கேள்வர் புகழ் சேர் *
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயர் ஆகி *
யவர் நம்மை ஆள்வர் பெரிதே
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன *
இனம் ஆய மான் பின் எழில் சேர் *
அலை மலி வேல்கணாளை அகல்விப்பதற்கு *
ஓர் உரு ஆய மானை அமையா **
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை *
பொடி ஆக வென்றி அமருள் *
சிலை மலி செஞ் சரங்கள் செல உய்த்த நங்கள் *
திருமால் நமக்கு ஓர் அரணே
முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண *
முதலோடு வீடும் அறியாது *
என் இது வந்தது? என்ன இமையோர் திசைப்ப *
எழில் வேதம் இன்றி மறைய **
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி *
இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ *
அன்னம் அது ஆய் இருந்து அங்கு அறநூல் உரைத்த *
அது நம்மை ஆளும் அரசே
துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது *
தொழுமின்கள் தொண்டர் தொலைய *
உண முலை முன் கொடுத்த உரவோளது ஆவி *
உக உண்டு வெண்ணெய் மருவி **
பணை முலை ஆயர் மாதர் உரலோடு கட்ட *
அதனோடும் ஓடி அடல் சேர் *
இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் *
வினை பற்று அறுக்கும் விதியே
கொலை கெழு செம் முகத்த களிறு ஒன்று கொன்று *
கொடியோன் இலங்கை பொடியா *
சிலை கெழு செஞ் சரங்கள் செல உய்த்த நங்கள் *
திருமாலை வேலை புடை சூழ் **
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு *
கலிகன்றி சொன்ன பனுவல் *
ஒலி கெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர் *
அவர் ஆள்வர் உம்பர் உலகே
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.