Corpus pasurams 1068–1077

This page preserves the source-defined decade 2, chapter 3 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 121 · corpus 1068

Pasuram 121

Study resources at Uveda
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் * வேழமும் பாகனும் வீழ *
செற்றவன் தன்னை புரம் எரி செய்த * சிவன் உறு துயர் களை தேவை **
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு * பார்த்தன் தன் தேர்முன் நின்றானை *
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே 1

Pasuram 122 · corpus 1069

Pasuram 122

Study resources at Uveda
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை * விழுமிய முனிவர் விழுங்கும் *
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றைக் * குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை * ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் * மாட மா மயிலைத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே 2

Pasuram 123 · corpus 1070

Pasuram 123

Study resources at Uveda
வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி * வந்த பேய் அலறி மண் சேர *
நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட நாதனைத் * தானவர் கூற்றை **
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் * வியந்துதி செய்யப் பெண் உரு ஆகி **
அம் சுவை அமுதம் அன்று அளித்தானைத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே 3

Pasuram 124 · corpus 1071

Pasuram 124

Study resources at Uveda
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த * எழில் விழவில் பழ நடைசெய் *
மந்திர விதியில் பூசனை பெறாது * மழை பொழிந்திடத் தளர்ந்து **
ஆயர் எந்தம்மோடு இன ஆ நிரை தளராமல் * எம் பெருமான் அருள் என்ன *
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானைத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே 4

Pasuram 125 · corpus 1072

Pasuram 125

Study resources at Uveda
இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் * நல் புவி தனக்கு இறைவன் *
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை * மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை ** பஞ்ச பாண்டவர்க்கு ஆகி * வாய் உரை தூது சென்று இயங்கும் *
என் துணை எந்தை தந்தை தம்மானை * திருவல்லிக்கேணிக் கண்டேனே 5

Pasuram 126 · corpus 1073

Pasuram 126

Study resources at Uveda
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன் * அணி இழையைச் சென்று *
எந்தமக்கு உரிமை செய் எனத் தரியாது * எம் பெருமான் அருள் என்ன **
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் * பெண்டிரும் எய்தி நூல் இழப்ப *
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை * திருவல்லிக்கேணிக் கண்டேனே 6

Pasuram 127 · corpus 1074

Pasuram 127

Study resources at Uveda
பரதனும் தம்பி சத்துருக்கனனும் * இலக்குமனோடு மைதிலியும் *
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற * இராவணாந்தகனை எம்மானை **
குரவமே கமழும் குளிர் பொழிலூடு * குயிலொடு மயில்கள் நின்று ஆல *
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே 7

Pasuram 128 · corpus 1075

Pasuram 128

Study resources at Uveda
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் * வாயில் ஓர் ஆயிரம் நாமம் *
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு * ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி **
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப * பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய் *
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே 8

Pasuram 129 · corpus 1076

Pasuram 129

Study resources at Uveda
மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான் * வேட்கையினோடு சென்று இழிந்த *
கான் அமர் வேழம் கைஎடுத்து அலறக் * கரா அதன் காலினைக் கதுவ **
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து * சென்று நின்று ஆழிதொட்டானை *
தேன் அமர் சோலை மாட மா மயிலைத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே 9

Pasuram 130 · corpus 1077

Pasuram 130

Study resources at Uveda
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் * மாட மாளிகையும் மண்டபமும் *
தென்னன் தொண்டையர் கோன் செய்த நல் மயிலைத் * திருவல்லிக்கேணி நின்றானை **
கன்னி நல் மாட மங்கையர் தலைவன் * காமரு சீர்க் கலிகன்றி *
சொன்ன சொல் மாலை பத்து உடன் வல்லார் * சுகம் இனிது ஆள்வர் வான் உலகே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.