This page preserves the source-defined decade 2, chapter 4 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
அன்று ஆயர் குலக் கொடியோடு * அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி *
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு * உறையும் இடம் ஆவது **
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை * தடம் திகழ் கோவல்நகர் *
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் * மா மலை ஆவது நீர்மலையே 1
காண்டா வனம் என்பது ஓர் காடு * அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க * முனே
மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும் * முன் உலகம் பொறை தீர்த்து **
ஆண்டான் அவுணன் அவன் மார்வு அகலம் * உகிரால் வகிர் ஆக முனிந்து * அரியாய்
நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம் * மா மலை ஆவது நீர்மலையே 2
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து * அடல் ஆழியினால் அணி ஆர் உருவின் *
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள் * பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில் **
பல மன்னர் படச் சுடர் ஆழியினைப் * பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர் *
நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு இடம் * மா மலை ஆவது நீர்மலையே 3
தாங்காதது ஓர் ஆள் அரி ஆய் * அவுணன் தனை வீட முனிந்து அவனால் அமரும் *
பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும் * வென்றி கொள் வாள் அமரில் **
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவிப் * பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட *
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம் * மா மலை ஆவது நீர்மலையே 4
மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு * அணை கட்டி வரம்பு உருவ மதி சேர் *
கோல மதிள் ஆய இலங்கை கெடப் * படை தொட்டு ஒருகால் அமரில் அதிர **
காலம் இது என்று அயன் வாளியினால் * கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும் *
நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு இடம் * மா மலை ஆவது நீர்மலையே 5
பார் ஆர் உலகும் பனி மால் வரையும் * கடலும் சுடரும் இவை உண்டும் * எனக்கு
ஆராது என நின்றவன் எம் பெருமான் * அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய ** அப்
பேரானை முனிந்த முனிக்கு அரையன் * பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான் *
நீர் ஆர் பேரான் நெடுமால் அவனுக்கு இடம் * மா மலை ஆவது நீர்மலையே 6
புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப் * புகழ் வீட முனிந்து உயிர் உண்டு * அசுரன்
நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும் * வென்றி கொள் வாள் அவுணன் **
பகராதவன் ஆயிரம் நாமம் * அடிப்பணியாதவனை பணியால் அமரில் *
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம் * மா மலை ஆவது நீர்மலையே 7
பிச்சச் சிறு பீலி பிடித்து உலகில் * பிணம் தின் மடவார் அவர் போல் * அங்ஙனே
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால் * அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய் **
நச்சி நமனார் அடையாமை * நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு *
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம் * மா மலை ஆவது நீர்மலையே 8
பேசும் அளவு அன்று இது வம்மின் * நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள் *
நாசம் அது செய்திடும் ஆதன்மையால் * அதுவே நமது உய்விடம் நாள் மலர் மேல் **
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் * மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதிஇல் *
நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம் * மா மலை ஆவது நீர்மலையே 9
நெடுமால் அவன் மேவிய நீர்மலைமேல் * நிலவும் புகழ் மங்கையர் கோன் * அமரில்
கட மா களி யானை வல்லான் * கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு ** உடனே
விடும் மால் வினை வேண்டிடில் * மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர் *
கொடு மா கடல் வையகம் ஆண்டு * மதிக்குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே 10
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.