This page preserves the source-defined decade 3, chapter 10 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழத் *
தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து * இவ் ஏழ் உலகத்தவர் பணிய * வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் ** பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் *
தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ *
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் *
அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 1
உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம் *
உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த *
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து * கஞ்சன்
குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் ** மருங்கு எங்கும்
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட *
பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் *
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் *
அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 3
ஓடாத ஆள் அரியின் உருவம் அது கொண்டு * அன்று
உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி *
வாடாத வள் உகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு *
அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் **
சேடு ஏறு மலர்ச் செருந்தி செழுங் கமுகம் பாளை *
செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே *
ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர் *
அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 4
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்விக் *
களவு இல் மிகு சிறு குறள் ஆய் மூவடி என்று இரந்திட்டு *
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம் *
அளந்த பிரான் அமரும் இடம் வளங் கொள் பொழில் அயலே *
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும் *
அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் *
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் *
அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 5
வாள் நெடுங் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா * இலங்கை
மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர *
தாள் நெடுந் திண் சிலை வளைத்த தயரதன் சேய் * என் தன்
தனிச் சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர் **
சேண் இடம் கொள் மலர்க் கமலம் சேல் கயல்கள் வாளை *
செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் *
வாள் நெடுங் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர் *
அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 6
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் *
தேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான் *
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான் *
கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி **
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் * ஐந்து
வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று * அங்கு
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் *
அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 7
கன்று அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை *
காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான் *
குன்று அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன் *
குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் **
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் * தூ மறையோர்
தொக்கு ஈண்டித் தொழுதியொடு மிகப் பயிலும் சோலை *
அன்று அலர்வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் *
அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 8
வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு * வாய்த்த
தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு * வலி மிக்க
கஞ்சன் உயிர் அது உண்டு இவ் உலகு உண்ட காளை *
கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி **
மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து *
வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி *
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் *
அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 9
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து * பின்னை
செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் தன் கோயில் *
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் *
அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழுங் குன்றை **
கன்றி நெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான் *
கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும் *
ஒன்றினொடும் ஒன்றும் இவை கற்று வல்லார் * உலகத்து
உத்தமர்கட்கு உத்தமர் ஆய் உம்பரும் ஆவர்களே 10
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.