Pasuram 301 · corpus 1248
Pasuram 301
போது அலர்ந்த பொழில் சோலைப் * புறம் எங்கும் பொரு திரைகள் *
தாது உதிர வந்து அலைக்கும் * தட மண்ணித் தென் கரைமேல் **
மாதவன் தான் உறையும் இடம் * வயல் நாங்கை * வரி வண்டு
தேதென என்று இசை பாடும் * திருத்தேவனார் தொகையே 1
Thirumangai Azhwar · Pasurams 301–310
Corpus pasurams 1248–1257
This page preserves the source-defined decade 4, chapter 1 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 301 · corpus 1248
போது அலர்ந்த பொழில் சோலைப் * புறம் எங்கும் பொரு திரைகள் *
தாது உதிர வந்து அலைக்கும் * தட மண்ணித் தென் கரைமேல் **
மாதவன் தான் உறையும் இடம் * வயல் நாங்கை * வரி வண்டு
தேதென என்று இசை பாடும் * திருத்தேவனார் தொகையே 1
Pasuram 302 · corpus 1249
யாவரும் ஆய் யாவையும் ஆய் * எழில் வேதப் பொருள்களும் ஆய் *
மூவரும் ஆய் முதல் ஆய * மூர்த்தி அமர்ந்து உறையும் இடம் **
மா வரும் திண் படை மன்னை * வென்றி கொள்வார் மன்னு நாங்கை *
தேவரும் சென்று இறைஞ்சு பொழில் * திருத்தேவனார் தொகையே 2
Pasuram 303 · corpus 1250
வான் நாடும் மண் நாடும் * மற்று உள்ள பல் உயிரும் *
தான் ஆய எம் பெருமான் * தலைவன் அமர்ந்து உறையும் இடம் **
ஆனாத பெருஞ் செல்வத்து * அரு மறையோர் நாங்கை தன்னுள் *
தேன் ஆரும் மலர்ப் பொழில் சூழ் * திருத்தேவனார் தொகையே 3
Pasuram 304 · corpus 1251
இந்திரனும் இமையவரும் * முனிவர்களும் எழில் அமைந்த *
சந்த மலர்ச் சதுமுகனும் * கதிரவனும் சந்திரனும் **
எந்தை! எமக்கு அருள் என நின்று * அருளும் இடம் எழில் நாங்கை *
சுந்தர நல் பொழில் புடை சூழ் * திருத்தேவனார் தொகையே 4
Pasuram 305 · corpus 1252
அண்டமும் இவ் அலை கடலும் * அவனிகளும் குல வரையும் *
உண்ட பிரான் உறையும் இடம் * ஒளி மணி சந்து அகில் கனகம் **
தெண் திரைகள் வரத் திரட்டும் * திகழ் மண்ணித் தென் கரைமேல் *
திண் திறலார் பயில் நாங்கைத் * திருத்தேவனார்தொகையே 5
Pasuram 306 · corpus 1253
ஞாலம் எல்லாம் அமுது செய்து * நான்மறையும் தொடராத *
பாலகன் ஆய் ஆல் இலையில் * பள்ளி கொள்ளும் பரமன் இடம் **
சாலி வளம் பெருகி வரும் * தட மண்ணித் தென் கரைமேல் *
சேல் உகளும் வயல் நாங்கைத் * திருத்தேவனார்தொகையே 6
Pasuram 307 · corpus 1254
ஓடாத வாளரியின் * உரு ஆகி இரணியனை *
வாடாத வள் உகிரால் * பிளந்து அளைந்த மாலது இடம் *
ஏடு ஏறு பெருஞ் செல்வத்து * எழில் மறையோர் நாங்கை தன்னுள் *
சேடு ஏறு பொழில் தழுவு * திருத்தேவனார்தொகையே 7
Pasuram 308 · corpus 1255
வார் ஆரும் இளங் கொங்கை * மைதிலியை மணம் புணர்வான் *
கார் ஆர் திண் சிலை இறுத்த * தனிக் காளை கருதும் இடம் **
ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து * எழில் மறையோர் நாங்கை தன்னுள் *
சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ் * திருத்தேவனார்தொகையே 8
Pasuram 309 · corpus 1256
கும்பம் மிகு மத யானை * பாகனொடும் குலைந்து வீழ *
கொம்பு அதனைப் பறித்து எறிந்த * கூத்தன் அமர்ந்து உறையும் இடம் **
வம்பு அவிழும் செண்பகத்தின் * மணம் கமழும் நாங்கை தன்னுள் *
செம் பொன் மதிள் பொழில் புடைசூழ் * திருத்தேவனார்தொகையே 9
Pasuram 310 · corpus 1257
கார் ஆர்ந்த திருமேனிக் * கண்ணன் அமர்ந்து உறையும் இடம் *
சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத் * திருத்தேவனார் தொகைமேல் **
கூர் ஆர்ந்த வேல் கலியன் * கூறு தமிழ்ப் பத்தும் வல்லார் *
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து * இமையவரோடு இருப்பாரே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.