Corpus pasurams 1218–1227

This page preserves the source-defined decade 3, chapter 8 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 271 · corpus 1218

Pasuram 271

Study resources at Uveda
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் *
நர நாரணனே கரு மா முகில்போல்
எந்தாய் * எமக்கே அருளாய் என நின்று *
இமையோர் பரவும் இடம் ** எத் திசையும்
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே *
களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து *
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 1

Pasuram 272 · corpus 1219

Pasuram 272

Study resources at Uveda
முதலைத் தனி மா முரண் தீர அன்று *
முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய *
விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி *
வினை தீர்த்த அம்மான் இடம் ** விண் அணவும்
பதலைக்க போதத்து ஒளி மாட நெற்றிப் *
பவளக் கொழுங் கால பைங் கால் புறவம் *
மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 2

Pasuram 273 · corpus 1220

Pasuram 273

Study resources at Uveda
கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய * அன்று
கொடு மா முதலைக்கு இடர்செய்து * கொங்கு ஆர்
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு **
அணைந்திட்ட அம்மான் இடம் * ஆள் அரியால்
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் *
அணி முத்தும் வெண் சாமரையோடு * பொன்னி
மலைப் பண்டம் அண்ட திரை உந்து நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 3

Pasuram 274 · corpus 1221

Pasuram 274

Study resources at Uveda
சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி * அன்று
திசை நான்கும் நான்கும் இரிய * செருவில்
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடியக் *
கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம் தான் **
முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர் *
ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர் *
மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 4

Pasuram 275 · corpus 1222

Pasuram 275

Study resources at Uveda
இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு *
இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து *
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்துத் *
தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம் தான் **
குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே *
குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு *
மழை ஆடு சோலை மயில் ஆலு நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 5

Pasuram 276 · corpus 1223

Pasuram 276

Study resources at Uveda
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப் *
பகு வாய்க் கழுதுக்கு இரங்காது * அவள் தன்
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் *
உடனே சுவைத்தான் இடம் ** ஓங்கு பைந் தாள்
கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகிக் *
கழுநீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து *
மண் ஏந்து இள மேதிகள் வைகு நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 6

Pasuram 277 · corpus 1224

Pasuram 277

Study resources at Uveda
தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத் *
தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் *
இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன்மேல் *
அடி வைத்த அம்மான் இடம் ** மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் *
செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று * முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 7

Pasuram 278 · corpus 1225

Pasuram 278

Study resources at Uveda
துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் *
துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் * முற்றா
இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் *
விளைவித்த அம்மான் இடம் ** வேல் நெடுங் கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று *
மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல் *
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 8

Pasuram 279 · corpus 1226

Pasuram 279

Study resources at Uveda
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த *
விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும் *
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று *
இமையோர் பரவும் இடம் ** பைந் தடத்துப்
பெடையோடு செங் கால அன்னம் துகைப்பத் *
தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர் *
மடை ஓட நின்று மது விம்மு நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 9

Pasuram 280 · corpus 1227

Pasuram 280

Study resources at Uveda
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர் *
மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு * என்றும்
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர் கோன் *
கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் **
கண்டார் வணங்கக் களி யானை மீதே *
கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய் *
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் *
விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.