This page preserves the source-defined decade 4, chapter 10 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் *
ஆல் இலை வளர்ந்த எம் பெருமான் *
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் *
பெரு நிலம் அளந்தவன் கோயில் **
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் *
எங்கும் ஆம் பொழில்களின் நடுவே *
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால் *
திருவெள்ளியங்குடி அதுவே 1
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு *
அரக்கர் தம் சிரங்களை உருட்டி *
கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவக் *
கண்ணனார் கருதிய கோயில் **
பூ நிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி *
பொதும்பிடை வரி வண்டு மிண்டி *
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும் *
திருவெள்ளியங்குடி அதுவே 2
கடு விடம் உடைய காளியன் தடத்தைக் *
கலக்கி முன் அலக்கழித்து * அவன் தன்
படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப்
பல் நடம் பயின்றவன் கோயில் **
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் *
பயிற்றிய நாடகத்து ஒலி போய் *
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும் *
திருவெள்ளியங்குடி அதுவே 3
கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த *
காளமேகத் திரு உருவன் *
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற *
பரமனார் பள்ளிகொள் கோயில் **
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும் *
தொகு திரை மண்ணியின் தென்பால் *
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும் *
திருவெள்ளியங்குடி அதுவே 4
பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து *
பாரதம் கையெறிந்து * ஒருகால்
தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த *
செங் கண் மால் சென்று உறை கோயில் **
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி *
எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி *
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற *
திருவெள்ளியங்குடி அதுவே 5
காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உறக் *
கடல் அரக்கர் தம் சேனை *
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த *
கோல வில் இராமன் தன் கோயில் **
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் *
ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி *
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் *
திருவெள்ளியங்குடி அதுவே 6
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த *
மாவலி வேள்வியில் புக்கு *
தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு *
திக்கு உற வளர்ந்தவன் கோயில் *
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் *
அரி அரி என்று அவை அழைப்ப *
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான் *
திருவெள்ளியங்குடி அதுவே 7
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் * அசுரர்
தம் பெருமானை * அன்று அரி ஆய்
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட *
மாயனார் மன்னிய கோயில் **
படியிடை மாடத்து அடியிடைத் தூணில் *
பதித்த பல் மணிகளின் ஒளியால் *
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய *
திருவெள்ளியங்குடி அதுவே 8
குடி குடி ஆகக் கூடி நின்று அமரர் *
குணங்களே பிதற்றி நின்று ஏத்த *
அடியவர்க்கு அருளி அரவு அணைத் துயின்ற *
ஆழியான் அமர்ந்து உறை கோயில் **
கடி உடைக் கமலம் அடியிடை மலரக் *
கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய *
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும் *
வயல் வெள்ளியங்குடி அதுவே 9
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால் *
பார் இடந்து எயிற்றினில் கொண்டு *
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற *
திருவெள்ளியங்குடியானை **
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன் *
மான வேல் கலியன் வாய் ஒலிகள் *
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் *
ஆள்வர் இக் குரை கடல் உலகே 10
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.