This page preserves the source-defined decade 5, chapter 8 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது
இரங்கி * மற்று அவற்கு இன் அருள் சுரந்து *
மாழை மான் மட நோக்கி உன் தோழி *
உம்பி எம்பி என்று ஒழிந்திலை ** உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற
சொற்கள் வந்து * அடியேன் மனத்து இருந்திட *
ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் *
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 1
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு *
மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை * உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச் *
செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு ** என்று
கோது இல் வாய்மையினாயொடும் உடனே *
உண்பன் நான் என்ற ஒண் பொருள் * எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் *
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 2
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை *
வைகு தாமரை வாங்கிய வேழம் *
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை
பற்ற * மற்று அது நின் சரண் நினைப்ப **
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் *
கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து * உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் *
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 3
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம் *
வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய் *
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு *
அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து **
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர் *
கொடிய செய்வன உள * அதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன் *
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 4
மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் *
மலர் அடி கண்ட மா மறையாளன் *
தோகை மா மயில் அன்னவர் இன்பம் *
துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து **
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே *
போதுவாய் என்ற பொன் அருள் * எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் *
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 5
மன்னு நான்மறை மா முனி பெற்ற
மைந்தனை * மதியாத வெம் கூற்றம்
தன்னை அஞ்சி * நின் சரண் என சரண் ஆய்த் *
தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா **
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் *
எண்ணிய பேர் அருள் * எனக்கும்
அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன் *
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 6
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் *
உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன் *
காதல் என் மகன் புகல் இடம் காணேன் *
கண்டு நீ தருவாய் எனக்கு என்று **
கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய *
குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய் *
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் *
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 7
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் *
எந்தை நின் சரண் என்னுடை மனைவி *
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் *
கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப **
ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச் செய்து *
உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் *
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் *
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 8
துளங்கு நீள் முடி அரசர் தம் குரிசில் *
தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு *
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து * அங்கு
ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப *
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்
செய்த ஆறு * அடியேன் அறிந்து * உலகம்
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் *
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 9
மாட மாளிகை சூழ் திருமங்கை
மன்னன் * ஒன்னலர் தங்களை வெல்லும் *
ஆடல்மா வலவன் கலிகன்றி *
அணி பொழில் திருவரங்கத்து அம்மானை **
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை *
எந்தையை நெடுமாலை நினைந்த *
பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர்
பாட * நும்மிடைப் பாவம் நில்லாவே 10
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.