This page preserves the source-defined decade 7, chapter 7 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
திருவுக்கும் திரு ஆகிய செல்வா *
தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா *
உருவச் செஞ் சுடர் ஆழி வல்லானே *
உலகு உண்ட ஒருவா திரு மார்பா **
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை என்றால் *
உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து * ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் *
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே 1
பந்து ஆர் மெல் விரல் நல் வளைத் தோளி *
பாவை பூ மகள் தன்னொடும் உடனே
வந்தாய் * என் மனத்தே மன்னி நின்றாய் *
மால் வண்ணா மழைபோல் ஒளி வண்ணா **
சந்தோகா பௌழியா தைத்திரியா *
சாம வேதியனே நெடுமாலே *
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் *
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே 2
நெய் ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் *
நீண்ட தோள் உடையாய் * அடியேனைச்
செய்யாத உலகத்திடைச் செய்தாய் *
சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து *
பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப் *
போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன் *
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் *
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே 3
பரனே பஞ்சவன் பௌழியன் சோழன் *
பார் மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும்
வரனே * மாதவனே மதுசூதா *
மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் **
நரனே நாரணனே திருநறையூர் *
நம்பீ எம் பெருமான் உம்பர் ஆளும்
அரனே * ஆதிவராகம் முன் ஆனாய் *
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே 4
விண்டான் விண் புக வெம் சமத்து அரி ஆய்ப் *
பரியோன் மார்வு அகம் பற்றிப் பிளந்து *
பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும் *
பண்பாளா பரனே பவித்திரனே **
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை *
கருமம் ஆவதும் என் தனக்கு அறிந்தேன் *
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் *
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே 5
தோயா இன் தயிர் நெய் அமுது உண்ணச்
சொன்னார் * சொல்லி நகும் பரிசே * பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும்
தாடாளா * தரையோர்க்கும் விண்ணோர்க்கும்
சேயாய் ** கிரேத திரேத துவாபர
கலியுகம் * இவை நான்கும் முன் ஆனாய் *
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் *
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே 6
நெடியானே கடி ஆர்கலி நம்பீ *
நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை *
கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து *
காவல் செய்த அக் காவலைப் பிழைத்து **
குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன் *
கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி *
அடியேனைப் பணி ஆண்டுகொள் எந்தாய் *
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே 8
கோ ஆய் ஐவர் என் மெய் குடி ஏறிக் *
கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போகார் * நான் அவரைப் பொறுக்ககிலேன் *
புனிதா புள் கொடியாய் நெடுமாலே **
தீ வாய் நாகணையில் துயில்வானே *
திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன் *
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் *
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே 9
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த *
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை *
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி
ஆலி நாடன் * மங்கைக் குல வேந்தன் **
சொன்ன இன் தமிழ் நல் மணிக் கோவை *
தூய மாலை இவை பத்தும் வல்லார் *
மன்னி மன்னவர் ஆய் உலகு ஆண்டு *
மான வெண் குடைக்கீழ் மகிழ்வாரே 10
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.