Corpus pasurams 1618–1627

This page preserves the source-defined decade 7, chapter 8 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 671 · corpus 1618

Pasuram 671

Study resources at Uveda
செங் கமலத் திருமகளும் புவியும் செம் பொன் *
திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த *
வங்கம் மலி தடங் கடலுள் அநந்தன் என்னும் *
வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின் **
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் * ஐந்து
வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை *
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 1

Pasuram 672 · corpus 1619

Pasuram 672

Study resources at Uveda
முன் இவ் உலகு ஏழும் இருள் மண்டி உண்ண *
முனிவரொடு தானவர்கள் திசைப்ப * வந்து
பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம் *
பரி முகம் ஆய் அருளிய எம் பரமன் காண்மின் **
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் *
சங்கம் அவை முரலச் செங் கமல மலரை ஏறி *
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 2

Pasuram 673 · corpus 1620

Pasuram 673

Study resources at Uveda
குலத் தலைய மத வேழம் பொய்கை புக்குக் *
கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று *
நிலத் திகழும் மலர்ச் சுடர் ஏய் சோதீ என்ன *
நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்மின் **
மலைத் திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு *
வந்து உந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய *
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 3

Pasuram 674 · corpus 1621

Pasuram 674

Study resources at Uveda
சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கண் குன்றம் *
திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றி ஆகி *
இலங்கு புவி மடந்தை தனை இடந்து புல்கி *
எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்மின் **
புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்க *
பொழில்கள்தொறும் குயில் கூவ மயில்கள் ஆல *
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 4

Pasuram 675 · corpus 1622

Pasuram 675

Study resources at Uveda
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகித் *
திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு *
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி
மாள * உயிர் வவ்விய எம் மாயோன் காண்மின் **
இனம் மேவு வரி வளைக் கை ஏந்தும் கோவை *
ஏய் வாய மரகதம்போல் கிளியின் இன் சொல் *
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 5

Pasuram 676 · corpus 1623

Pasuram 676

Study resources at Uveda
வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி *
மாண் உரு ஆய் மூவடி மாவலியை வேண்டி *
தான் அமர ஏழ் உலகும் அளந்த வென்றித் *
தனி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின் **
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதிச் *
செழு மாட மாளிகைகள் கூடம்தோறும் *
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 6

Pasuram 677 · corpus 1624

Pasuram 677

Study resources at Uveda
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகிப் *
பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன் *
அந்தம் இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ *
அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்மின் **
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் *
திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க *
அந்தணர் தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 7

Pasuram 678 · corpus 1625

Pasuram 678

Study resources at Uveda
கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு
பறித்து * மழ விடை அடர்த்துக் குரவை கோத்து *
வம்பு அவிழும் மலர்க் குழலாள் ஆய்ச்சி வைத்த
தயிர் வெண்ணெய் * உண்டு உகந்த மாயோன் காண்மின் **
செம் பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத் *
திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும் *
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 8

Pasuram 679 · corpus 1626

Pasuram 679

Study resources at Uveda
ஊடு ஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும் *
ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற *
நீடு ஏறு பெரு வலித் தோள் உடைய வென்றி *
நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்மின் **
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித் *
திருவிழவில் மணி அணிந்த திண்ணைதோறும் *
ஆடு ஏறு மலர்க் குழலார் பயிலும் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 9

Pasuram 680 · corpus 1627

Pasuram 680

Study resources at Uveda
பன்றி ஆய் மீன் ஆகி அரி ஆய்ப் * பாரைப்
படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை *
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் *
அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை **
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் *
கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல் *
ஒன்றினொடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் *
ஒலி கடல் சூழ் உலகு ஆளும் உம்பர் தாமே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.