Corpus pasurams 223–233
This page preserves the source-defined decade 3, chapter 1 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு * தளர்நடைஇட்டு வருவான் *
பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு * ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் **
மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச * வாய்வைத்த பிரானே *
அன்னே உன்னை அறிந்துகொண்டேன் * உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (1)
பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுது ஊட்டிப் போனேன் * வருமளவு இப்பால் *
வன் பாரச் சகடம் இறச் சாடி * வடக்கில் அகம் புக்கு இருந்து **
மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை * வேற்றுருவம் செய்து வைத்த *
அன்பா உன்னை அறிந்துகொண்டேன் * உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (2)
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் * குடத் தயிர் சாய்த்துப் பருகி *
பொய்ம் மாய மருது ஆன அசுரரைப் * பொன்றுவித்து இன்று நீ வந்தாய் **
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ * உன்னை என்மகனே என்பர் நின்றார் *
அம்மா உன்னை அறிந்துகொண்டேன் * உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (3)
மைஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை * மையன்மை செய்து அவர் பின்போய் *
கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று * குற்றம் பல பல செய்தாய் **
பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ * புத்தகத்துக்கு உள கேட்டேன் *
ஐயா உன்னை அறிந்துகொண்டேன் * உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (4)
முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு * தயிரும் விழுங்கி *
கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த * கலத்தொடு சாய்த்துப் பருகி **
மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல * விம்மி விம்மி அழுகின்ற *
அப்பா உன்னை அறிந்துகொண்டேன் * உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (5)
கரும்பார் நீள் வயல் காய்கதிர்ச் செந்நெலைக் * கற்றாநிரை மண்டித் தின்ன *
விரும்பாக் கன்று ஒன்று கொண்டு * விளங்கனி வீழ எறிந்த பிரானே **
சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச் * சூழ்வலை வைத்துத் திரியும் *
அரம்பா உன்னை அறிந்துகொண்டேன் * உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (6)
மருட்டார் மென்குழல் கொண்டு பொழில் புக்கு * வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி *
சுருட்டார் மென்குழல் கன்னியர் வந்து உன்னைச் * சுற்றும் தொழ நின்ற சோதி **
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் * உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் * மற்று இங்கு
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் * உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (7)
வாளா ஆகிலும் காணகில்லார் * பிறர் மக்களை மையன்மை செய்து *
தோளால் இட்டு அவரோடு திளைத்து * நீ சொல்லப் படாதன செய்தாய் **
கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி கெட்டேன் * வாழ்வில்லை * நந்தன்
காளாய் உன்னை அறிந்துகொண்டேன் * உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (8)
தாய்மார் மோர் விற்கப் போவர் * தகப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர் *
நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை * நேர்படவே கொண்டு போதி **
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து * கண்டார் கழறத் திரியும் *
ஆயா உன்னை அறிந்துகொண்டேன் * உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (9)
தொத்தார் பூங்குழல் கன்னி ஒருத்தியைச் * சோலைத் தடம் கொண்டு புக்கு *
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை * மூவேழு சென்றபின் வந்தாய் **
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் * உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன் *
அத்தா உன்னை அறிந்துகொண்டேன் * உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (10)
காரார் மேனி நிறத்து எம்பிரானைக் * கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி *
ஆரா இன்னமுது உண்ணத் தருவன் நான் * அம்மம் தாரேன் என்ற மாற்றம் **
பாரார் தொல்புகழான் புதுவை மன்னன் * பட்டர்பிரான் சொன்ன பாடல் *
ஏரார் இன்னிசை மாலைகள் வல்லார் * இருடிகேசன் அடியாரே (11)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.
← Pasurams 201–210
Periyalvar Tirumozhi contents
Pasurams 222–231 →