This page preserves the source-defined decade 3, chapter 5 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர் கோன் * வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட *
மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப * மதுசூதன் எடுத்து மறித்த மலை **
இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி * இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும் *
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (2)
அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும் * ஆனாயரும் ஆநிரையும் அலறி *
எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப * இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை **
தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப் * புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று *
கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (3)
கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக் * கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல் *
அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு * அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை **
கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக் * கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி * எங்கும்
குடவாய்ப் பட நின்று மழை பொழியும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (4)
வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் * அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல் *
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை * இடவன் எழ வாங்கி எடுத்த மலை **
கானக் களி யானை தன் கொம்பு இழந்து * கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்து *
கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (5)
செப்பாடு உடைய திருமால் அவன் தன் * செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும் *
கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள் * காம்பு ஆகக் கொடுத்துக் கவித்த மலை **
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி * இலங்கு மணி முத்துவடம் பிறழ *
குப்பாயம் என நின்று காட்சிதரும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (6)
படங்கள் பலவும் உடைப் பாம்பு அரையன் * படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல் *
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் * தாமோதரன் தாங்கு தடவரை தான் **
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த * அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை *
குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (7)
சல மா முகில் பல் கணப் போர்க்களத்துச் * சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு *
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல் * நாராயணன் முன் முகம் காத்த மலை **
இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர் * இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய *
கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (8)
வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன் * வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை *
தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னில் * தாமோதரன் தாங்கு தடவரை தான் **
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள் * முதுகில் பெய்து தம் உடைக் குட்டன்களை *
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (9)
கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள் * கோலமும் அழிந்தில வாடிற்று இல *
வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல * மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம் **
முடி ஏறிய மா முகில் பல் கணங்கள் * முன் நெற்றி நரைத்தன போல * எங்கும்
குடி ஏறி இருந்து மழை பொழியும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (10)