Pasuram 326 · corpus 338
Pasuram 326
அலம்பா வெருட்டாக் * கொன்று திரியும் அரக்கரை *
குலம் பாழ் படுத்துக் * குலவிளக்காய் நின்ற கோன் மலை **
சிலம்பு ஆர்க்க வந்து * தெய்வ மகளிர்கள் ஆடும் சீர் *
சிலம்பாறு பாயும் * தென் திருமாலிருஞ் சோலையே (1)
Periyalvar · Pasurams 326–336
Corpus pasurams 338–348
This page preserves the source-defined decade 4, chapter 2 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 326 · corpus 338
அலம்பா வெருட்டாக் * கொன்று திரியும் அரக்கரை *
குலம் பாழ் படுத்துக் * குலவிளக்காய் நின்ற கோன் மலை **
சிலம்பு ஆர்க்க வந்து * தெய்வ மகளிர்கள் ஆடும் சீர் *
சிலம்பாறு பாயும் * தென் திருமாலிருஞ் சோலையே (1)
Pasuram 327 · corpus 339
வல்லாளன் தோளும் * வாள் அரக்கன் முடியும் * தங்கை
பொல்லாத மூக்கும் * போக்குவித்தான் பொருந்தும் மலை **
எல்லா இடத்திலும் * எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி *
செல்லா நிற்கும் சீர்த் * தென் திருமாலிருஞ் சோலையே (2)
Pasuram 328 · corpus 340
தக்கார் மிக்கார்களைச் * சஞ்சலம் செய்யும் சலவரைத் *
தெக்கு ஆம் நெறியே போக்குவிக்கும் * செல்வன் பொன்மலை **
எக் காலமும் சென்று * சேவித்திருக்கும் அடியரை *
அக் கான் நெறியை மாற்றும் * தண் திருமாலிருஞ் சோலையே (3)
Pasuram 329 · corpus 341
ஆனாயர் கூடி * அமைத்த விழவை * அமரர் தம்
கோனார்க்கு ஒழியக் * கோவர்த்தனத்துச் செய்தான் மலை **
வான் நாட்டினின்று * மாமலர்க் கற்பகத் தொத்து இழி *
தேன் ஆறு பாயும் * தென் திருமாலிருஞ் சோலையே (4)
Pasuram 330 · corpus 342
ஒரு வாரணம் * பணி கொண்டவன் பொய்கையில் * கஞ்சன் தன்
ஒரு வாரணம் * உயிர் உண்டவன் சென்று உறையும் மலை **
கரு வாரணம் * தன் பிடி துறந்து ஓடக் * கடல்வண்ணன்
திருவாணை கூறத் திரியும் * தண் மாலிருஞ் சோலையே (5)
Pasuram 331 · corpus 343
ஏவிற்றுச் செய்வான் * ஏன்று எதிர்ந்து வந்த மல்லரை *
சாவத் தகர்த்த * சாந்து அணி தோள் சதுரன் மலை **
ஆவத் தனம் என்று * அமரர்களும் நன் முனிவரும் *
சேவித்திருக்கும் * தென் திருமாலிருஞ் சோலையே (6)
Pasuram 332 · corpus 344
மன்னர் மறுக * மைத்துனன்மார்க்கு ஒரு தேரின் மேல் *
முன் அங்கு நின்று * மோழை எழுவித்தவன் மலை **
கொல் நவில் கூர்வேல் கோன் * நெடுமாறன் தென்கூடல் கோன் *
தென்னன் கொண்டாடும் * தென் திருமாலிருஞ் சோலையே (7)
Pasuram 333 · corpus 345
குறுகாத மன்னரைக் கூடு கலக்கி * வெங் கானிடைச்
சிறுகால் நெறியே போக்குவிக்கும் * செல்வன் பொன்மலை **
அறுகால் வரி வண்டுகள் * ஆயிர நாமம் சொல்லி *
சிறுகாலைப் பாடும் * தென் திருமாலிருஞ் சோலையே (8)
Pasuram 334 · corpus 346
சிந்தப் புடைத்துச் * செங்குருதி கொண்டு * பூதங்கள்
அந்திப் பலி கொடுத்து * ஆவத் தனம் செய் அப்பன் மலை **
இந்திர கோபங்கள் * எம்பெருமான் கனி வாய் ஒப்பான் *
சிந்தும் புறவில் * தென் திருமாலிருஞ் சோலையே (9)
Pasuram 335 · corpus 347
எட்டுத் திசையும் * எண் இறந்த பெருந் தேவிமார் *
விட்டு விளங்க * வீற்றிருந்த விமலன் மலை **
பட்டிப் பிடிகள் * பகடு உரிஞ்சிச் சென்று * மாலைவாய்த்
தெட்டித் திளைக்கும் * தென் திருமாலிருஞ் சோலையே (10)
Pasuram 336 · corpus 348
மருதப் பொழில் அணி * மாலிருஞ் சோலை மலை தன்னை *
கருதி உறைகின்ற * கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை **
விரதம் கொண்டு ஏத்தும் * வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல் *
கருதி உரைப்பவர் * கண்ணன் கழலிணை காண்பரே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.