Corpus pasurams 812–821

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 61 · corpus 812

Pasuram 61

Study resources at Uveda
நடந்த கால்கள் நொந்தவோ? * நடுங்க ஞாலம் ஏனமாய் *
 இடந்த மெய் குலுங்கவோ? * விலங்கு மால் வரைச் சுரம் **
 கடந்த கால் பரந்த * காவிரிக் கரைக் குடந்தையுள் *
 கிடந்தவாறு எழுந்திருந்து பேசு * வாழி கேசனே (61)

Pasuram 62 · corpus 813

Pasuram 62

Study resources at Uveda
கரண்டம் ஆடு பொய்கையுள் * கரும் பனைப் பெரும் பழம் *
 புரண்டு வீழ வாளை பாய் * குறுங்குடி நெடுந்தகாய் **
 திரண்ட தோள் இரணியன் * சினங் கொள் ஆகம் ஒன்றையும் *
 இரண்டு கூறு செய்து உகந்த * சிங்கம் என்பது உன்னையே (62)

Pasuram 63 · corpus 814

Pasuram 63

Study resources at Uveda
நன்று இருந்து யோக நீதி * நண்ணுவார்கள் சிந்தையுள் *
 சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே **
 குன்று இருந்த மாடம் நீடு * பாடகத்தும் ஊரகத்தும் *
 நின்று இருந்து வெஃகணைக் கிடந்தது * என்ன நீர்மையே? (63)

Pasuram 64 · corpus 815

Pasuram 64

Study resources at Uveda
நின்றது எந்தை ஊரகத்து * இருந்தது எந்தை பாடகத்து *
 அன்று வெஃகணைக் கிடந்தது * என் இலாத முன்னெலாம் **
 அன்று நான் பிறந்திலேன் * பிறந்த பின் மறந்திலேன் *
 நின்றதும் இருந்ததும் * கிடந்ததும் என் நெஞ்சுளே (64)

Pasuram 65 · corpus 816

Pasuram 65

Study resources at Uveda
நிற்பதும் ஒர் வெற்பகத்து * இருப்பும் விண் கிடப்பதும் *
 நற்பெருந் திரைக் கடலுள் * நான் இலாத முன்னெலாம் **
 அற்புதன் அனந்த சயனன் * ஆதிபூதன் மாதவன் *
 நிற்பதும் இருப்பதும் * கிடப்பதும் என் நெஞ்சுளே (65)

Pasuram 66 · corpus 817

Pasuram 66

Study resources at Uveda
இன்று சாதல் நின்று சாதல் * அன்றி யாரும் வையகத்து *
 ஒன்றி நின்று வாழ்தல் இன்மை * கண்டும் நீசர் என்கொலோ **
 அன்று பார் அளந்த பாத * போதை ஒன்றி வானின் மேல் *
 சென்று சென்று தேவராய் * இருக்கிலாத வண்ணமே? (66)

Pasuram 67 · corpus 818

Pasuram 67

Study resources at Uveda
சண்ட மண்டலத்தின் ஊடு * சென்று வீடு பெற்று மேல் *
 கண்டு வீடு இலாத காதல் * இன்பம் நாளும் எய்துவீர் **
 புண்டரீக பாத புண்ய கீர்த்தி * நும் செவி மடுத்து *
 உண்டு நும் உறுவினைத் * துயருள் நீங்கி உய்ம்மினோ (67)

Pasuram 68 · corpus 819

Pasuram 68

Study resources at Uveda
முத்திறத்து வாணியத்து * இரண்டில் ஒன்றும் நீசர்கள் *
 மத்தராய் மயங்குகின்றது * இட்டு அதில் இறந்து போந்து **
 எத்திறத்தும் உய்வது ஓர் * உபாயம் இல்லை உய்குறில் *
 தொத்து இறுத்த தண் துழாய் * நன் மாலை வாழ்த்தி வாழ்மினோ (68)

Pasuram 69 · corpus 820

Pasuram 69

Study resources at Uveda
காணிலும் உருப் பொலார் * செவிக்கு இனாத கீர்த்தியார் *
 பேணிலும் வரந்தர * மிடுக்கு இலாத தேவரை **
 ஆணம் என்று அடைந்து வாழும் * ஆதர்காள் எம் ஆதிபால் *
 பேணி நும் பிறப்பு எனும் * பிணக்கு அறுக்க கிற்றிரே (69)

Pasuram 70 · corpus 821

Pasuram 70

Study resources at Uveda
குந்தமோடு சூலம் வேல்கள் * தோமரங்கள் தண்டு வாள் *
 பந்தமான தேவர்கள் * பரந்து வானகம் உற **
 வந்த வாணன் ஈரைஞ்ஞூறு * தோள்களைத் துணித்த நாள்
 அந்த அந்த ஆகுலம் * அமரரே அறிவரே (70)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.