This page preserves the source-defined decade 10, chapter 3 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
வேய் மரு தோள் இணை மெலியும் ஆலோ! *
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக் *
காமரு குயில்களும் கூவும் ஆலோ! *
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ! **
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு *
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ! *
தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ! *
தகவிலை தகவிலையே நீ கண்ணா (1)
தகவிலை தகவிலையே நீ கண்ணா! *
தட முலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆரா *
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து * அது கனவு என நீங்கி ஆங்கே **
அக உயிர் அகம் அகம்தோறும் உள் புக்கு *
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ *
மிக மிக இனி உன்னைப் பிரிவை ஆமால் *
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே (2)
வீவன் நின் பசு நிரை மேய்க்கப் போக்கு *
வெவ்வுயிர் கொண்டு எனது ஆவி வேமால் *
யாவரும் துணை இல்லை யான் இருந்து
உன் * அஞ்சன மேனியை ஆட்டம் காணேன் **
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால் *
பொரு கயல் கண் இணை நீரும் நில்லா *
சாவது இவ் ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் * பிறந்த
இத் தொழுத்தையோம் தனிமை தானே (3)
பணிமொழி நினைதொறும் ஆவி வேமால் *
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா *
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவப் *
பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ! **
மணி மிகு மார்பினில் முல்லைப்போது * என்
வன முலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து *
அணி மிகு தாமரைக் கையை அந்தோ! *
அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய் (5)
அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய் *
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம் *
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர்
அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் **
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா *
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே *
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு *
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே (6)
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு *
வெள் வளை மேகலை கழன்று வீழ *
தூ மலர்க் கண் இணை முத்தம் சோரத் *
துணை முலை பயந்து என தோள்கள் வாட **
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண *
மெல் மலர் அடி நோவ நீ போய் *
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு *
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? (7)
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கு? என்று *
ஆழும் என் ஆர் உயிர் ஆன் பின் போகேல் *
கசிகையும் வேட்கையும் உள்கலந்து *
கலவியும் நலியும் என் கைகழியேல் **
வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும் *
கைகளும் பீதக உடையும் காட்டி *
ஒசிசெய் நுண் இடை இள ஆய்ச்சியர் *
நீ உகக்கும் நல்லவரொடும் உழிதராயே (8)
உகக்கும் நல்லவரொடும் உழிதந்து *
உன் தன் திருவுள்ளம் இடர் கெடும்தோறும் * நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் *
எம் பெருமான் பசு மேய்க்கப் போகேல் **
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு *
நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ *
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே *
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ (9)
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ! *
அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ *
தவத்தவர் மறுக நின்று உழிதருவர் *
தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்
உவர்த்தலை ** உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற * என்னுடை ஆவி வேமால் *
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி *
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே (10)
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு * அத்
திருவடி திருவடிமேல் * பொருநல்
சங்கு அணி துறைவன் வண் தென் குருகூர் *
வண் சடகோபன் சொல் ஆயிரத்துள் **
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை *
அவனொடும் பிரிவதற்கு இரங்கி * தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான்
உரைத்தன * இவையும் பத்து அவற்றின் சார்வே (11)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.