This page preserves the source-defined decade 3, chapter 10 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் *
சங்கொடு சக்கரம் வில் *
ஒண்மை உடைய உலக்கை ஒள் வாள் *
தண்டு கொண்டு புள் ஊர்ந்து ** உலகில்
வன்மை உடைய அரக்கர் * அசுரரை
மாளப் படை பொருத *
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற *
நான் ஓர் குறைவு இலனே (1)
குறைவு இல் தடங் கடல் கோள் அரவு ஏறித் *
தன் கோலச் செந்தாமரைக்கண் *
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த *
ஒளி மணி வண்ணன் கண்ணன் **
கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி *
அசுரரைக் காய்ந்த அம்மான் *
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் *
யான் ஒரு முட்டு இலனே (2)
முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் *
மூவுலகுக்கு உரிய *
கட்டியைத் தேனை அமுதை *
நன்பாலைக் கனியைக் கரும்பு தன்னை **
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி *
அவன் திறத்துப்
பட்ட பின்னை * இறையாகிலும் *
யான் என் மனத்துப் பரிவு இலனே (3)
பரிவு இன்றி வாணனைக் காத்தும் * என்று
அன்று படையொடும் வந்து எதிர்ந்த *
திரிபுரம் செற்றவனும் மகனும் *
பின்னும் அங்கியும் போர் தொலைய **
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய
மாயனை * ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை * அச்சுதனைப் பற்றி *
யான் இறையேனும் இடர் இலனே (4)
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் *
எல்லா உலகும் கழிய *
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் *
உடன் ஏறத் திண் தேர் கடவி **
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் *
வைதிகன் பிள்ளைகளை *
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி *
ஒன்றும் துயர் இலனே (5)
துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி *
நின்ற வண்ணம் நிற்கவே *
துயரில் மலியும் மனிசர் பிறவியில் *
தோன்றிக்கண் காண வந்து **
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில் *
புக உய்க்கும் அம்மான் *
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற *
யான் ஓர் துன்பம் இலனே (6)
துன்பமும் இன்பமும் ஆகிய *
செய்வினை ஆய் உலகங்களும் ஆய் *
இன்பம் இல் வெம் நரகு ஆகி *
இனிய நல் வான் சுவர்க்கங்களும் ஆய் **
மன் பல் உயிர்களும் ஆகிப் *
பலபல மாய மயக்குக்களால் *
இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்று *
ஏதும் அல்லல் இலனே (7)
அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் *
அழகு அமர் சூழ் ஒளியன் *
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள் *
ஆகியும் நிற்கும் அம்மான் **
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு *
எல்லாக் கருமங்களும் செய் *
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி *
யான் ஓர் துக்கம் இலனே (8)
துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி *
துழாய் அலங்கல் பெருமான் *
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து *
வேண்டும் உருவு கொண்டு **
நக்க பிரானோடு அயன் முதலாக *
எல்லாரும் எவையும் * தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று *
ஒன்றும் தளர்வு இலனே (9)
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த *
தனிமுதல் ஞானம் ஒன்றாய் *
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால் *
அருவு ஆகி நிற்கும் **
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் *
பூதங்கள் ஐந்தை இரு சுடரை *
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி *
யான் என்றும் கேடு இலனே (10)
கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் *
குருகூர்ச் சடகோபன் சொன்ன *
பாடல் ஓர் ஆயிரத்துள் *
இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு ** அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண *
நலனிடை ஊர்தி பண்ணி *
வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும் *
ஒரு நாயகமே (11)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.