This page preserves the source-defined decade 4, chapter 4 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
மண்ணை இருந்து துழாவி *
வாமனன் மண் இது என்னும் *
விண்ணைத் தொழுது அவன் மேவு *
வைகுந்தம் என்று கை காட்டும் **
கண்ணை உள்நீர் மல்க நின்று *
கடல்வண்ணன் என்னும் அன்னே * என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு *
என் செய்கேன் பெய் வளையீரே? (1)
பெய்வளைக் கைகளைக் கூப்பிப் *
பிரான் கிடக்கும் கடல் என்னும் *
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டிச் *
சிரீதரன் மூர்த்தி ஈது என்னும் **
நையும் கண்ணீர் மல்க நின்று *
நாரணன் என்னும் அன்னே *
தெய்வ உருவில் சிறுமான் * என்
செய்கின்றது ஒன்று அறியேனே (2)
அறியும் செந்தீயைத் தழுவி *
அச்சுதன் என்னும் மெய் வேவாள் *
எறியும் தண் காற்றைத் தழுவி *
என்னுடைக் கோவிந்தன் என்னும் **
வெறி கொள் துழாய் மலர் நாறும் *
வினையுடையாட்டியேன் பெற்ற *
செறி வளை முன் கைச் சிறுமான் *
செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே? (3)
ஒன்றிய திங்களைக் காட்டி *
ஒளி மணி வண்ணனே என்னும் *
நின்ற குன்றத்தினை நோக்கி *
நெடுமாலே வா என்று கூவும் **
நன்று பெய்யும் மழை காணில் *
நாரணன் வந்தான் என்று ஆலும் *
என்று இன மையல்கள் செய்தார் *
என்னுடைக் கோமளத்தையே? (4)
கோமள வான் கன்றைப் புல்கிக் *
கோவிந்தன் மேய்த்தன என்னும் *
போம் இள நாகத்தின் பின் போய் *
அவன் கிடக்கை ஈது என்னும் **
ஆம் அளவு ஒன்றும் அறியேன் *
அருவினையாட்டியேன் பெற்ற *
கோமள வல்லியை மாயோன் *
மால் செய்து செய்கின்ற கூத்தே (5)
ஏறிய பித்தினோடு *
எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் *
நீறு செவ்வே இடக் காணில் *
நெடுமால் அடியார் என்று ஓடும் **
நாறு துழாய் மலர் காணில் *
நாரணன் கண்ணி ஈது என்னும் *
தேறியும் தேறாதும் மாயோன் *
திறத்தனளே இத் திருவே (7)
திரு உடை மன்னரைக் காணில் *
திருமாலைக் கண்டேனே என்னும் *
உரு உடை வண்ணங்கள் காணில் *
உலகு அளந்தான் என்று துள்ளும் **
கரு உடைத் தேவு இல்கள் எல்லாம் *
கடல் வண்ணன் கோயிலே என்னும் *
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் *
கண்ணன் கழல்கள் விரும்புமே (8)
விரும்பிப் பகவரைக் காணில் *
வியல் இடம் உண்டானே! என்னும் *
கரும் பெரு மேகங்கள் காணில் *
கண்ணன் என்று ஏறப் பறக்கும் **
பெரும் புல ஆ நிரை காணில் *
பிரான் உளன் என்று பின் செல்லும் *
அரும் பெறல் பெண்ணினை மாயோன் *
அலற்றி அயர்ப்பிக்கின்றானே (9)
அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கும் *
அகலவே நீள் நோக்குக் கொள்ளும் *
வியர்க்கும் மழைக்கண் துளும்ப *
வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும் **
பெயர்த்தும் கண்ணா! என்று பேசும் *
பெருமானே, வா! என்று கூவும் *
மயல் பெருங் காதல் என் பேதைக்கு *
என் செய்கேன் வல்வினையேனே? (10)