Pasuram 399 · corpus 3189
Pasuram 399
சீலம் இல்லாச் சிறியனேலும் * செய்வினையோ பெரிதால் *
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி * நாராயணா என்று என்று **
காலந்தோறும் யான் இருந்து * கைதலைபூசல் இட்டால் *
கோல மேனி காண வாராய் * கூவியும் கொள்ளாயே (1)
Nammazhvar · Pasurams 399–409
Corpus pasurams 3189–3199
This page preserves the source-defined decade 4, chapter 7 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 399 · corpus 3189
சீலம் இல்லாச் சிறியனேலும் * செய்வினையோ பெரிதால் *
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி * நாராயணா என்று என்று **
காலந்தோறும் யான் இருந்து * கைதலைபூசல் இட்டால் *
கோல மேனி காண வாராய் * கூவியும் கொள்ளாயே (1)
Pasuram 400 · corpus 3190
கொள்ள மாளா இன்ப வெள்ளம் * கோது இல தந்திடும் * என்
வள்ளலேயோ வையம் கொண்ட * வாமனாவோ என்று என்று **
நள் இராவும் நன் பகலும் * நான் இருந்து ஓலம் இட்டால் *
கள்ள மாயா உன்னை * என் கண் காண வந்து ஈயாயே (2)
Pasuram 401 · corpus 3191
ஈவு இலாத தீவினைகள் * எத்தனை செய்தனன்கொல்? *
தாவி வையம் கொண்ட எந்தாய் * தாமோதரா என்று என்று **
கூவிக் கூவி நெஞ்சு உருகி * கண்பனி சோர நின்றால் *
பாவி நீ என்று ஒன்று சொல்லாய் * பாவியேன் காண வந்தே (3)
Pasuram 402 · corpus 3192
காண வந்து என் கண்முகப்பே * தாமரைக்கண் பிறழ *
ஆணி செம்பொன் மேனி எந்தாய் * நின்று அருளாய் என்று என்று **
நாணம் இல்லாச் சிறு தகையேன் * நான் இங்கு அலற்றுவது என் *
பேணி வானோர் காணமாட்டாப் * பீடு உடை அப்பனையே? (4)
Pasuram 403 · corpus 3193
அப்பனே அடல் ஆழியானே * ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே * உன் தோள்கள் நான்கும் * கண்டிடக் கூடுங்கொல்? என்று **
எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு * ஆவி துவர்ந்து துவர்ந்து *
இப்பொழுதே வந்திடாய் என்று * ஏழையேன் நோக்குவனே (5)
Pasuram 404 · corpus 3194
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் * யான் எனது ஆவியுள்ளே *
நாக்கு நீள்வன் ஞானம் இல்லை * நாள்தோறும் என்னுடைய **
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் * அல்ல புறத்தினுள்ளும் *
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்! * நின்னை அறிந்து அறிந்தே (6)
Pasuram 405 · corpus 3195
அறிந்து அறிந்து தேறித் தேறி * யான் எனது ஆவியுள்ளே *
நிறைந்த ஞான மூர்த்தியாயை * நின்மலமாக வைத்து **
பிறந்தும் செத்தும் நின்று இடறும் * பேதைமை தீர்ந்தொழிந்தேன் *
நறுந் துழாயின் கண்ணி அம்மா * நான் உன்னைக் கண்டுகொண்டே (7)
Pasuram 406 · corpus 3196
கண்டு கொண்டு என் கைகள் ஆர * நின் திருப்பாதங்கள் மேல் *
எண் திசையும் உள்ள பூக் கொண்டு * ஏத்தி உகந்து உகந்து **
தொண்டரோங்கள் பாடி ஆடச் * சூழ் கடல் ஞாலத்துள்ளே *
வண் துழாயின் கண்ணி வேந்தே * வந்திடகில்லாயே (8)
Pasuram 407 · corpus 3197
இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன் * ஐம்புலன் வெல்ல கில்லேன் *
கடவன் ஆகி காலந்தோறும் * பூப் பறித்து ஏத்த கில்லேன் **
மட வன் நெஞ்சம் காதல் கூர * வல்வினையேன் அயர்ப்பாய் *
தடவுகின்றேன் எங்குக் காண்பன் * சக்கரத்து அண்ணலையே? (9)
Pasuram 408 · corpus 3198
சக்கரத்து அண்ணலே என்று * தாழ்ந்து கண்ணீர் ததும்ப *
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் * பாவியேன் காண்கின்றிலேன் **
மிக்க ஞான மூர்த்தி ஆய * வேத விளக்கினை * என்
தக்க ஞானக் கண்களாலே * கண்டு தழுவுவனே (10)
Pasuram 409 · corpus 3199
தழுவி நின்ற காதல் தன்னால் * தாமரைக் கண்ணன் தன்னை *
குழுவு மாடத் தென் குருகூர் * மாறன் சடகோபன் ** சொல்
வழுவு இலாத ஒண் தமிழ்கள் * ஆயிரத்துள் இப் பத்தும் *
தழுவப் பாடி ஆட வல்லார் * வைகுந்தம் ஏறுவரே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.