This page preserves the source-defined decade 7, chapter 2 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் *
கண்ண நீர் கைகளால் இறைக்கும் *
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் *
தாமரைக் கண் என்றே தளரும் **
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு? என்னும் *
இரு நிலம் கை துழா இருக்கும் *
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் ! *
இவள் திறத்து என் செய்கின்றாயே? (1)
என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா?
என்னும் * கண்ணீர் மல்க இருக்கும் *
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்?
என்னும் * வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும் **
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் *
முகில்வண்ணா தகுவதோ? என்னும் *
முன் செய்து இவ் உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் *
என்கொலோ முடிகின்றது இவட்கே? (2)
வட்கு இலள் இறையும் மணிவண்ணா என்னும் *
வானமே நோக்கும் மையாக்கும் *
உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட *
ஒருவனே என்னும் உள் உருகும் **
கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய் *
காகுத்தா கண்ணனே என்னும் *
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்! *
இவள்திறத்து என் செய்திட்டாயே? (3)
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் *
எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும் *
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் *
கடல்வண்ணா கடியைகாண் என்னும் **
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் *
வந்திடாய் என்று என்றே மயங்கும் *
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய் *
இவள்திறத்து என் சிந்தித்தாயே? (4)
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் *
திருவரங்கத்துள்ளாய்! என்னும்
வந்திக்கும் * ஆங்கே மழைக்கண் நீர் மல்க *
வந்திடாய் என்று என்றே மயங்கும் **
அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே *
அலை கடல் கடைந்த ஆர் அமுதே *
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த *
தையலை மையல் செய்தானே (5)
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே
என்னும் * மா மாயனே என்னும் *
செய்ய வாய் மணியே என்னும் * தண் புனல் சூழ்
திருவரங்கத்துள்ளாய் என்னும் **
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில்
ஏந்தும் * விண்ணோர் முதல் என்னும்; *
பை கொள் பாம்பு அணையாய் இவள்திறத்து அருளாய் * பாவியேன்
செயற்பாலதுவே (6)
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் *
பற்றிலார் பற்ற நின்றானே *
கால சக்கரத்தாய் கடல் இடம் கொண்ட *
கடல்வண்ணா கண்ணனே என்னும் **
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்
என்னும் * என் தீர்த்தனே என்னும் *
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் *
என்னுடைக் கோமளக் கொழுந்தே (7)
கொழுந்து வானவர்கட்கு என்னும் * குன்று ஏந்திக்
கோ நிரை காத்தவன் என்னும் *
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் *
அஞ்சன வண்ணனே என்னும் **
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் *
எங்ஙனே நோக்குகேன்? என்னும் *
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் *
என் செய்கேன் என் திருமகட்கே? (8)
என் திருமகள் சேர் மார்வனே என்னும் *
என்னுடை ஆவியே என்னும் *
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட *
நிலமகள் கேள்வனே என்னும் **
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட *
ஆய்மகள் அன்பனே என்னும் *
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே *
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே (9)
முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும் *
மூவுலகு ஆளியே என்னும் *
கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் *
நான்முகக் கடவுளே என்னும் **
வடிவு உடை வானோர் தலைவனே என்னும் *
வண் திருவரங்கனே என்னும் *
அடி அடையாதாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் * முகில்வண்ணன் அடியே (10)