Corpus pasurams 3662–3672

This page preserves the source-defined decade 8, chapter 10 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 872 · corpus 3662

Pasuram 872

Study resources at Uveda
நெடுமாற்கு அடிமை செய்வேன்போல் *
 அவனைக் கருத வஞ்சித்து *
 தடுமாற்று அற்ற தீக்கதிகள் * முற்றும்
 தவிர்ந்த சதிர் நினைந்தால் **
 கொடு மா வினையேன் அவன் அடியார்
 அடியே * கூடும் இது அல்லால் *
 விடுமாறு என்பது என் அந்தோ! *
 வியன் மூவுலகு பெறினுமே? (1)

Pasuram 873 · corpus 3663

Pasuram 873

Study resources at Uveda
வியன் மூவுலகு பெறினும் போய்த் *
 தானே தானே ஆனாலும் *
 புயல் மேகம்போல் திருமேனி
 அம்மான் * புனை பூம் கழல் அடிக்கீழ் **
 சயமே அடிமை தலைநின்றார் *
 திருத்தாள் வணங்கி * இம்மையே
 பயனே இன்பம் யான் பெற்றது *
 உறுமோ பாவியேனுக்கே? (2)

Pasuram 874 · corpus 3664

Pasuram 874

Study resources at Uveda
உறுமோ பாவியேனுக்கு * இவ்
 உலகம் மூன்றும் உடன் நிறைய *
 சிறு மா மேனி நிமிர்த்த * என்
 செந்தாமரைக்கண் திருக்குறளன் **
 நறு மா விரை நாள் மலர் அடிக்கீழ்ப் *
 புகுதல் அன்றி அவன் அடியார் *
 சிறு மா மனிசராய் என்னை
 ஆண்டார் * இங்கே திரியவே? (3)

Pasuram 875 · corpus 3665

Pasuram 875

Study resources at Uveda
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் *
 இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த *
 செங்கோலத்த பவளவாய்ச் *
 செந்தாமரைக்கண் என் அம்மான் **
 பொங்கு ஏழ் புகழ்கள் வாயவாய்ப் *
 புலன்கொள் வடிவு என் மனத்தாய் *
 அங்கேய் மலர்கள் கையவாய் *
 வழிபட்டு ஓட அருளிலே? (4)

Pasuram 876 · corpus 3666

Pasuram 876

Study resources at Uveda
வழிபட்டு ஓட அருள் பெற்று *
 மாயன் கோல மலர் அடிக்கீழ் *
 சுழிபட்டு ஓடும் சுடர்ச்சோதி
 வெள்ளத்து * இன்புற்று இருந்தாலும் **
 இழிபட்டு ஓடும் உடலினில்
 பிறந்து * தன் சீர் யான் கற்று *
 மொழிபட்டு ஓடும் கவிஅமுதம் *
 நுகர்ச்சி உறுமோ முழுதுமே? (5)

Pasuram 877 · corpus 3667

Pasuram 877

Study resources at Uveda
நுகர்ச்சி உறுமோ மூவுலகின் *
 வீடு பேறு தன் கேழ் இல் *
 புகர்ச் செம் முகத்த களிறு அட்ட *
 பொன் ஆழிக்கை என் அம்மான் **
 நிகர்ச் செம் பங்கி எரி விழிகள் *
 நீண்ட அசுரர் உயிர் எல்லாம் *
 தகர்த்து உண்டு உழலும் புள் பாகன் *
 பெரிய தனி மாப் புகழே? (6)

Pasuram 878 · corpus 3668

Pasuram 878

Study resources at Uveda
தனி மாப் புகழே எஞ்ஞான்றும் *
 நிற்கும் படியாத் தான் தோன்றி *
 முனி மாப் பிரம முதல் வித்தாய் *
 உலகம் மூன்றும் முளைப்பித்த **
 தனி மாத் தெய்வத் தளிர் அடிக்கீழ்ப் *
 புகுதல் அன்றி அவன் அடியார் *
 நனி மாக் கலவி இன்பமே *
 நாளும் வாய்க்க நங்கட்கே (7)

Pasuram 879 · corpus 3669

Pasuram 879

Study resources at Uveda
நாளும் வாய்க்க நங்கட்கு *
 நளிர் நீர்க் கடலைப் படைத்து * தன்
 தாளும் தோளும் முடிகளும் *
 சமன் இலாத பல பரப்பி **
 நீளும் படர் பூங் கற்பகக்
 காவும் * நிறை பல் நாயிற்றின் *
 கோளும் உடைய மணி மலைபோல் *
 கிடந்தான் தமர்கள் கூட்டமே (8)

Pasuram 880 · corpus 3670

Pasuram 880

Study resources at Uveda
தமர்கள் கூட்ட வல்வினையை *
 நாசம் செய்யும் சது மூர்த்தி *
 அமர் கொள் ஆழி சங்கு வாள் *
 வில் தண்டு ஆதி பல் படையன் **
 குமரன் கோல ஐங்கணை வேள்
 தாதை * கோது இல் அடியார் தம் *
 தமர்கள் தமர்கள் தமர்களாம் *
 சதிரே வாய்க்க தமியேற்கே (9)

Pasuram 881 · corpus 3671

Pasuram 881

Study resources at Uveda
வாய்க்க தமியேற்கு * ஊழிதோறு
 ஊழி ஊழி * மா காயாம்
 பூக் கொள் மேனி நான்கு தோள் *
 பொன் ஆழிக் கை என் அம்மான் **
 நீக்கம் இல்லா அடியார் தம் *
 அடியார் அடியார் அடியார் எம்
 கோக்கள் * அவர்க்கே குடிகளாய்ச்
 செல்லும் * நல்ல கோட்பாடே (10)

Pasuram 882 · corpus 3672

Pasuram 882

Study resources at Uveda
நல்ல கோட்பாட்டு உலகங்கள் *
 மூன்றினுள்ளும் தான் நிறைந்த *
 அல்லிக் கமலக் கண்ணனை *
 அம் தண் குருகூர்ச் சடகோபன் **
 சொல்லப்பட்ட ஆயிரத்துள் *
 இவையும் பத்தும் வல்லார்கள் *
 நல்ல பதத்தால் மனை வாழ்வர் *
 கொண்ட பெண்டீர் மக்களே 11

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.